எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ? இந்த பாடல் என் பெற்றோர்க்கு மிகவும் பிடித்த பாடல்.. கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் வரும் இந்த அழகிய பாடலின் தொடக்கத்தில் யாழ் மீட்டுவது போன்ற காட்சி இடம்பெறும்.
வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்
பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்தசுரங்களே அதில் வாசிக்கமுடியும். யாழைச் சுத்த மேளமாகிய செம்பாலை அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி, பின்னர் வேறு இராகங்களைக் கிரகபேதம் செய்து வாசித்தனர்.
தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது.
தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிந்தனை இல்லையென்றாலும் பின்னர் மகரயாழ், செங்கோட்டுயாழ் எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக வளர்ச்சி கண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக