இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி!
கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? பல நூற்றாண்டுகளாக தமிழ்ப் பாடல்களை கோவில்களில் பாடுவது மறுக்கப்பட்டு வந்தபோது , தமிழ் இசை வளர்ப்பதற்காக தன்னலமற்ற அறிஞர்கள் சிலர் பெரு முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார்கள். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், நாம் கால இயந்திரத்தில் சற்று பின்னோக்கி சென்று நம் தமிழிசை ஏன் ஒடுக்கப்பட்டது / எப்படி ஒடுக்கபட்டது என்று தெரிந்துகொள்வோம்.
அக்காலங்களில் தமிழிசை தமிழ்பக்தி இலக்கியங்கள் மூலமாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழ்பக்தி இலக்கியங்கள் என்பது சைவம், வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழ் பக்தி இயக்கம் கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை தமிழகத்தில் செயற்பட்ட சமய,சமூக அரசியல் இயக்கமாகும். தமிழர்களின் பல சங்ககால விழுமியங்களை பறைசாற்றும் விதமாகவும், வைணவ சமயம் மற்றும் சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும், அக்காலப்பகுதியில் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ் பக்தி இயக்கம் அமைந்தது.
தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்மார்களில் சிலர் சைவ சமயத்தினையும் வளர்க்க பல்வேறு இலக்கியங்களை படைத்தனர். இந்த இலக்கியங்களின் துணைகொண்டே சமண, பௌத்த சமயங்கள் தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
காரைக்கால் அம்மையார் பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம்,கடைக்காப்பு,புதிய யாப்பு வடிவான கலித்துறை மற்றும் வெண்பா வடிவத்தினை பக்தி இலக்கியத்தில் அறிமுகம் செய்தார். அவரைப் பின்தொடர்ந்தே பல இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை.
1. பன்னிரு திருமுறை (தேவாரம் ,திருப்புகழ்)
2. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
அப்பர்- சுந்தரர் - ஞானசம்பந்தர் மற்றும் நாயன்மார்கள் ஏற்படுத்திய தமிழ் பக்தி இலக்கிய நூல்களுக்கு தமிழர்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சைவ சமயம் மற்றும் வைணமும் சேர்ந்து வளர்ந்தது. சமயம்வளர்க்கவே தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டதாகவும் கொள்ளலாம்.
சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிருதிருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர். இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர். திருமுறைகளில் முதல் மூன்றை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர்.
அடுத்த மூவர் தலைமுறை " ஆதி இசை மும்மூர்த்திகள்" ஆவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.தமிழ்க் கீர்த்தனைகளின் முன்னோடிகள் இவர்களே !
சோழ மன்னர்களாலும் பாண்டிய மன்னர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட தமிழ் இசை, விஜயநகர மன்னர்களின் படையெடுப்பால், தெலுங்கு பேசும் மன்னர்களில் ஆக்கிரமிப்பால், தமிழ்ப் பாடல்கள் கோவில்களில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மதுரையிலும் இதே நிலைமை தான். நாயக்க மன்னர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நகரங்களின் தமிழிசை பாடல்கள் பாடுவது அறவே நின்றது.
தமிழர்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்து வளர்ந்து செழிப்புற்ற தமிழிசை கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் பின் வீழ்ச்சியை நோக்கி பயணப்பட ஆரம்பித்தது
அதே சமயத்தில் ,இசை ஆர்வமிக்க தெலுங்கு பேசும் மன்னர்கள், தெலுங்கு மற்றும் சமஸ்க்ருதப் பாடல்களை இயற்றவும், பாடவும் , மென்மேலும் திறமைகள் வளர்க்கவும் தளம் அமைத்துத் தந்தனர் ..
புரந்தரதாசர் (1470–1564) "கர்நாடக இசையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். செழுமைப்படுத்தப்பட்ட இசைமரபாக, பாரம்பரியமாக, தென்னக இசை வடிவததை ஒருங்கிணைத்த பிதாமகர் இவரே!
இப்படியே பல நூற்றாண்டுகள் கழிந்தன . சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனைகளாலும் , சமஸ்க்ருத கீர்த்தனைகளாலும் கர்நாடக இசை வடிவம் வளர, மென்மேலும் வலு சேர்க்க உதவி புரிந்தார் (1767 to 1847 - 17th century )
கர்நாடக இசை மும்மூர்த்திகளாக அறியப்படுகின்ற தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் இயற்றிய தெலுங்குக் கீர்த்தனைகள் மன்னர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு புகழ் ஏணியில் ஏற்றி வைக்க பட்டன. தமிழ் கீர்த்தனைகளோ, தேவாரமோ மறந்தும் கூட மக்களிடையே பாடப்படவில்லை!
வெவ்வேறு மொழி பேசும் ஆட்சியாளர்கள் வரும்போது , தமிழ் மொழி ஒடுக்கப்பட்டே இருந்திருக்கிறது .. இன்று நாம் அந்நியமொழி எதிர்ப்பு பேசுகின்றோம்.. இது ஏதோ இந்த நூற்றாண்டில் நடக்கின்ற விஷயமல்ல..வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, எப்போதுமே நம் மொழிக்கான போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது..
அடுத்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் , அடிப்படை உரிமைகளுக்கே போராட்டம் வரும்போது மொழியை எங்கே வளர்த்தெடுப்பது ?
இப்படியான ஒரு காலத்தில் தான் நம் முண்டாசுக்கவியும், பாவேந்தரும், நாமக்கல் வெ ராமலிங்கப்பிள்ளையும், கவிமணி தேசிக விநாயக பிள்ளையும் நிறைய எழுச்சிமிக்கப் பாடல்கள் மூலமாக, மக்களை மொழியோடு இணைத்து கொள்ள, தமிழைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு பட்டிருக்கிறார்கள். பக்தி என்ற தளத்தில் மட்டுமே இயங்கி வந்த , சுழன்று வந்த தமிழ் பாடல்களை , தேசபக்தி, தன்னெழுச்சி, காதல், இயற்கை போன்ற வகைகளிலும் இயற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தது இவர்களே !
இந்தக்காலகட்டத்தில் தான் சபாக்களில் கீர்த்தனைகள் பாடுவது பிரபலமானது. ஆனால் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்படவில்லை அனுமதி இல்லை , வரவேற்பும் இல்லை .. அப்போதுதான் 1939 இல் தமிழ் இசை Movement ஒன்று தொடங்க பட்டு இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டமும் இதுவே . தமிழ்ப்பாடல்களை பாடுவதற்கான தளம் அமைத்து கொடுத்தவர் ராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள். பெரும் செல்வந்தரான அவர் தமிழ்ப்பாடல்களை பாட, பார்வையாளர்களைக் கவர கட்டிய கட்டடம் தான், வட சென்னையில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றம் .
கருத்துகள்
கருத்துரையிடுக