முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதியும் குள்ளச்சாமியும் !


பாரதியின் நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த வாரத்தில்,பாரதியின் வாழ்க்கைத்தேடல்களைப்  பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு மணி நேரத்தில்  எழுதி , பதிவேற்றிவிட்டேன்.(Pat on my back 😄 )

நம் எல்லோருக்குள்ளும் ஒரு தேடல் இருக்கிறது. அதிலும் இந்த நூற்றாண்டில் அறிவியல் கண்ணாடி கொண்டு பார்க்கும் ஆர்வம் மேலோங்கியதால் "இருக்கு ஆனா இல்ல" மாதிரியான குழப்ப மனநிலை மேலோங்குகிறது.இறுதியாக ஒரு குருவின் பார்வையில் அவரின் ஒரு வழிகாட்டுதலில் ஏதேனும் புலப்படுமா என்று சில ஆன்மீக குருக்களின் வழியின் செல்லும் Trend-ம் இருக்கிறது. நம் பாரதியாருக்கும் அப்படி ஒரு ஆன்மீகத்தேடலும் வாழ்க்கைத்தேடலும் பலகாலம் கூடவேப் பயணித்திருக்கிறது.அவரின் பாணியில் அதைப்  பாட்டாக எழுதி இருக்கின்றார். 

பாரதியாரே என்னைப் போன்றப்  பலருக்கு குரு தான்.. ஆனால் அவருக்கே ஒரு குரு இருந்திருக்கின்றார். 

அவரின் குருவின் பெயர் குள்ளச்சாமி ☺️ காரணப்பெயர் மாதிரி தோன்றுகிறது அல்லவா? அவர் உண்மையான மனிதரா? அல்லது பாரதியின் கற்பனை குருவா என்று தெரியவில்லை.. ஆனால் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த பாடல்களாக இருக்கின்றன பாரதியும் குள்ளச்சாமியம் சந்தித்துக்கொள்ளும்  சம்பவங்கள் எல்லாம்!

முதல் பத்தியில் அந்த குருவின் தரிசனத்தைப் பற்றி எழுதுகிறார். ஒரு உபநிஷ நூலை Proof  பார்க்க சென்ற இடத்தில் முதன் முதலாக, தெருவில் சுற்றி அலையும் பித்தனைப்  போலிருந்த ஒரு மனிதனைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அவருள் பல எண்ணவோட்டங்கள். செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டுப்  பித்தனை நோக்கி ஓடுகிறார். கையைப் பிடித்துக் கொள்கிறார். அவருக்கு "தான் யாரென்றே குழப்பம்". "நான் யாரென்று எனக்கு உணர்த்து" என்று இறைஞ்சுகிறார்.. ( அவருக்கும் நம்மைப்போலவே IDENTITY  CRISIS இருந்திருக்கும் போல 🫣) 

அதே நேரத்தில் இப்படிக் கவலைகளற்று, விளையாட்டுப் பிள்ளையாய்ச்  சுற்றித்  திரியும் குள்ளச்சாமி அவருக்கு ஆச்சர்யம் அளிக்கிறார். புத்தனைப் போலவும், பரமசிவனாகவும் காட்சியளிக்கும் குள்ளச்சாமியின் பின்னால் இருக்கும் ரகசியத்தைக் கேட்கிறார் 

குருதரிசனம்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி

அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா

என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,

இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்

முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை

மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி

என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்

இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 

அப்போது நான் குள்ளச் சாமி கையை

அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;

அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.

அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;

செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி

சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;

ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,

உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே. 

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?

யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?

தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்

தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?

பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?

பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?

ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,

ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் என்றேன். 

கேள்விக்கேட்டதும், குள்ளச்சாமி கையை உதறி ஓடுகிறார். பின் தொடர்ந்த பாரதியிடம் ஒரு மதில் சுவரையும், கிணற்றில் தெரியும் பிம்பத்தையும் காட்டுகிறார்.. ஏதாவது புரிகிறதா என்று வினவுகிறார் .. பாரதியோ திருதிருவென விழிக்கிறார். குள்ளச்சாமி சிரித்துக்கொண்டே நகர்ந்து விடுகிறார்..

யோசித்துப் பார்க்கும்போது பாரதிக்கு ஒன்று புலப்படுகிறது. மண்சுவர் போல் சும்மா இருந்தாலே போதும், கிணற்றின் உள்ளே தெரிகின்ற பிம்பத்தைப்  போல,  நமக்கே நாம் யாரென்று புலப்படும் , நம்முள் இருக்கின்ற இறைமையும் புலப்படும்  என்று புரிகிறது.

நூலைப் படித்துப் புரிந்து கொள்வது போல அத்துணை எளிதான காரியம் அல்ல  "நான் யார்?" என்ற தேடல். இந்தத் தேடல் இல்லாத மனிதனே இல்லை.. சில நேரங்களில் நாம் யாரையோப் பார்த்து அவர்போல் Imitate  செய்ய முற்படுகிறோம்.. பின்பு அதுவும் சலிக்கிறது.. அடுத்து வேறொருவர்.. வேறொருவர்.. என்று மனிதர்களை நகலெடுக்க செய்யும் முயற்சியில், உண்மையில் நாம் யாரென்றே நமக்கு மறந்து விடுகிறது அல்லது நம்மை நாமே உற்று நோக்கத் தவறிவிடுகிறோம்.. உள்நோக்கிய பயணத்தின் முடிவில் தான் ஆன்மீக ஆரம்பம் இருக்கிறது.தேடலின் முதல் வேர் அவருக்கு பிடிபடுகிறது.

மற்றொருநாள் குள்ளச்சாமி ஒரு அழுக்கு மூட்டையை சுமந்து வருவதைப் பார்க்கிறார்.. எதுக்கு இப்படி தேவை இல்லாமல் ஓர் அழுகுமூட்டையை சுமந்து செல்கிறீர் என்று கேட்கிறார். "ஹா ஹா ஹா" என்று சிரித்தக் குள்ளச்சாமி நான் வெளியே சுமக்கிறேன் .. நீ உன் மனதின் உள்ளே சுமக்கிறாய் என்று சொன்னபடி நகர்கிறார்.. பொருள் உணர்ந்த பாரதி நம்மிடம் இப்படி சொல்கிறார்  

" மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே

இன்னலுற்ற மாந்தரெலாம் மடிவார் வீணே,

இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்" 

இருதயத்தில் விடுதலை ! எவ்வளவு அழகான வார்த்தைகள் ! 

கிறிஸ்துவ விவிலியத்தில்  ஒரு வசனம் உண்டு!

"நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்"

சங்கீதம் 69:18

இங்கே நமக்கு "சத்துரு" எனப்படுவதே நம்முடைய பழைய தேவை இல்லாத நினைவு மூட்டைகள் தான்..  அதைத்தான் குள்ளச்சாமியும் "தூக்கித் தூரப் போட்டு ஜாலியா இரு தம்பி" என்று பாரதியாருக்குச் சொல்லிச்செல்கிறார்.. 

அதை பாரதி எப்படி Interpret  செய்கிறார் என்று பாருங்கள் !

ஒவ்வொரு முறையும்  புதுக்காற்று நம்முள் வருகிறது , நம் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன,  அப்படியானால் நீ மட்டும் எப்படி பழைய மனிதன் ஆவாய் ? நீ என்பது உன் நினைவுகளோ உன் கடந்த காலமோ அல்ல , நடப்பதெல்லாம் உன் கர்மவினை என்ற மயக்கத்தில் இருக்காதே.. இன்று புதியதாய்ப்  பிறந்தோம் என்ற உத்வேகத்தோடு வா என்று அழைக்கிறார்.. 

சென்றதினி மீளாது;மட ரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைனத்துக் கொண்டு
தின்றுவிளை யடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும், 32

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33

இந்த உண்மை அறிந்த கணத்தில், நான்  இழந்த நாட்களை, இழந்த நட்புகளை ,இழந்த பொருட்களை பற்றியோ கவலை கொள்ள மாட்டேன்.. நான் புதியவன் நானே என்னை படைப்பவன் , எனக்கு எந்தக்குறையும் இல்லை என்ற Affirmation Technique சொல்லித்தருகிறார் .நம்மிடமிருந்து நமக்கே விடுதலை அளிக்கும் மந்திரம் அல்லவா இது ?

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்

குள்ளச்சாமிக்கு நன்றியோடு "மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க" என்ற வாழ்த்துகளோடு , 

புத்தம் புது மனிதனாய், தெளிவின் பாதையில் 

நடக்கிறார்.. நம்மையும் சேர்த்துக்கொண்டுதான் 😊

முழுப்பாடல் இங்கே :

http://bharathipaadal.our24x7i.com/bharathiar_kavithaigal/102/7.jws

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சி யில் சில சுவாரஸ்யமான பழமொழிகள்  உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet),  இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன.  இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) .  தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் ..  தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக்  குறிக்கும்.  நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப்  பேசுகிறது !  ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்!            கடலால்  சூழப்பட்ட  இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு  BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட  என்ற  தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்து

இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி!

  இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி! கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? பல நூற்றாண்டுகளாக தமிழ்ப் பாடல்களை கோவில்களில் பாடுவது மறுக்கப்பட்டு வந்தபோது , தமிழ் இசை வளர்ப்பதற்காக தன்னலமற்ற அறிஞர்கள் சிலர் பெரு முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார்கள். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், நாம் கால இயந்திரத்தில் சற்று பின்னோக்கி சென்று நம் தமிழிசை ஏன் ஒடுக்கப்பட்டது / எப்படி ஒடுக்கபட்டது என்று  தெரிந்துகொள்வோம். அக்காலங்களில் தமிழிசை தமிழ்பக்தி இலக்கியங்கள் மூலமாகவே  வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழ்பக்தி இலக்கியங்கள் என்பது சைவம்,  வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழ் பக்தி இயக்கம் கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை தமிழகத்தில் செயற்பட்ட சமய,சமூக அரசியல் இயக்கமாகும். தமிழர்களின் பல சங்ககால விழுமியங்களை பறைசாற்றும் விதமாகவும், வைணவ சமயம் மற்றும் சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும்,  அக்காலப்பகுதியில் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ் பக்தி இயக்கம் அமைந்தது. தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்ம