பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சியில் சில சுவாரஸ்யமான பழமொழிகள் உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet), இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன.
இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) . தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் .. தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக் குறிக்கும்.
நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப் பேசுகிறது !
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்!
கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட என்ற தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்துப் பாருங்கள்! நமக்கு யாரைப் பிடிக்கும்? நம்மைத் தட்டிக்கொடுத்து, உயர்த்திப் பேசும் மனிதர்களைத் தானே? எல்லாருக்கும் பிடித்த மனிதன் எப்படிப் பேச வேண்டும் ? மற்றவர்களின் மாண்பு குறையாமல் ,உயர்த்திப் பேசுவதில் இருந்து வழுவாமல் இருக்க வேண்டும்!
வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
வீங்கல் என்றால் இருக்கும் இயல்பு நிலையில் இருந்து மேல் எழுதல் அல்லது முன்னேறுதல் .. குறிப்பாக, சமூகத்தில், தான் இருக்கும் நிலையில் இருந்து, மேலும் தன்னைத் தானே சற்று உயர்த்துதல். ஒருவன் தன்னை உயர்த்த வேண்டுமானால், தனக்குப் புகழ் வரும் செயல்களை சலிப்பு அடையாது செய்ய வேண்டும்..
கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
ஒன்றனைக் கற்றல் விரும்புவான் , தன்னைக் கற்பிக்கும் ஆசிரியர்க்கு உண்டான மதிப்பையும், நன்றியையும் கொடுக்கவில்லை என்றால், அங்கே கற்றல் என்பது நிகழாது.. ஆசிரியர் வித்தகனாக இருக்க போய் தானே , அவரிடம் சென்றீர்கள்? அவருக்கு அணுக்கமான மாணவனாக இருத்தலே, முழுமையான கல்வி கற்கும் வழி.
நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
ஏதேனும் ஒரு துறையில் வல்லவனாக , பலமாக , கம்பீரமாக நிலைத்து நிற்க வேண்டுவோன் , ஒரு தவம் போல தான் மேற்கொண்ட செயலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்கள் பல மணி நேரங்கள் பயிற்சியில் ஈடுபடுவது எதற்காக? டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு நாளைக்கு 6 மணிநேரங்கள் பயிற்சி செய்வாராம்!
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
சூழ்ச்சி என்பதன் பொருள் ஆராய்தல் அல்லது நுண்ணறிவு.. ஒருவன் மேம்பட்ட வாழ்க்கையை விரும்புவானாயின், தன்னை தானே ஆராய்ந்து, தன் நிறை குறைகளை பற்றிய தெற்றனவு கொள்வதில் ( SELF Introspection) இருந்து நீங்காமல் இருக்க வேண்டும். அடிக்கடி Self Review செய்வது அவசியம்.
சூழ்ச்சி என்பதன் பொருள் அறிய,
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது
என்ற திருக்குறளை படித்துப் பாருங்கள்
மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
ஒருவன் கல்வியிலோ, புகழிலோ அல்லது பொருளிலோ, மிகுதியாக நிரம்பி இருக்க விரும்பினால், அதற்கான முயற்சிகளை வருத்தமென நீக்கான். மறுபடியும் செரீனா வில்லியம்ஸ் வேண்டாம்.. WARREN BUFFET ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரங்கள் வணிக செய்திகள் படிப்பாராம்..
தண்டாப்பத்து திரும்பத்திரும்ப அறிவுறுத்துவது எல்லாம், தேர்ந்தெடுத்தத்துறையில் எப்படி EXCEL ஆவது? என்பதை பற்றிதான்.
இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
இன்பத்தை விரும்பிய ஒருவன், அந்த இன்பம் அடைவதற்கான துன்பத்தைத் துன்பமென்று களையான். பாடத்தில் 100 மதிப்பெண்கள் வேண்டுபவன், கூடுதலாக சில பாடங்கள் படிப்பதை , இரவில் கண் விழித்துப் படிப்பதைத் துன்பம் என்று நினைக்க மாட்டான்.. வெற்றி வேண்டி நிற்பவன், அதற்கான முயற்சியில் வரும் தோல்விகளைத் துன்பம் என்று நினைக்க மாட்டான். ஒன்பது நேர்முகத்தேர்வில் தோல்வியுற்றாலும் பத்தாவது Interview -இல் Iron செய்து Tuck-in செய்த சட்டையோடு காத்திருப்பான்.
துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
இதற்கான சரியான விளக்கம் கொஞ்சம் குழப்பமானது (Tricky) தான். எளிதாக விளக்க வேண்டுமானால், 3 மணி நேரங்கள் செலவழித்து ஒரு சினிமாவைப் பார்ப்பதைக் காட்டிலும், 2 மணி நேரங்கள் உங்கள் தோட்டத்தை சமன்படுத்தினால் , சீர் செய்தால், உங்கள் இல்லத்தரசியிடம் இருந்து ஸ்பெஷல் காபி கிடைக்கும்! கூடவே, எக்ஸ்ட்ரா மில்லி மீட்டர் புன்னகையும் :)
வாழ்க்கையில் முதலில் வரும் துன்பத்தை, ஏற்று நடப்பவன், பின்னாளில் வரும் இன்பத்தை வேண்டாம் என்று விட்டுவிட மாட்டான்.
ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
ஏமம் என்றால் குடிமக்கள் .. இந்த காலத்தில் தலைவன் எனக்கொள்ளலாம். குடிகளைக் காக்க விரும்பிய அரசன் ( தலைவன் ) தான் முறைமைப்படி நடத்தலில் இருந்து நீங்க மாட்டான். உங்கள் குழந்தைகள் 6 மணிக்கு எழ வேண்டுமானால், நீங்கள் முதலில் 5.55 க்கு துயில் களைய (கலைய) உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் 😊
காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்
இதுக்கு விளக்கம் ஏதும் தேவை இல்லை தானே? ஒரு பெண்ணை விரும்புபவன் காத்திருப்பது எல்லாம் , கடைக்கண் பார்வைக்கு தானே? எப்படி அந்த குறிப்புச்சொல்லை Miss பண்ணுவான்? 😍
விளக்கம் மிகச் சிறப்பு
பதிலளிநீக்கு