இடுகைகள்

பொலிதல்!

படம்
இட்டு நிரப்ப முடியாத கருந்துளைக்குள் கவிதைகள் கொட்டிக்கொண்டிருக்கிறேன்! அழகாய் எழுதுகிறாய் என்கிறார்கள் உந்துவிசை எதுவென விசாரிக்கிறார்கள் இயக்கமாய் இங்கே தோன்றுவதெல்லாம் இயங்குதலின் ஒரு கோணம்! இயக்குவிசையின் ஒரு பரிமாணம்! வார்த்தைகள் கோர்த்து பள்ளம் சரிசெய்ய பணிக்கப்பட்டிருக்கிறது அன்றாடம்! எது எப்படியோ.. பிரசவம் முடிந்த அன்னையாய் தூங்கும் நேரங்கள் மட்டும் ஆசீர்வாதம் 😌

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1

படம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை சிறுகதைகள் மற்றும் அவரின் இணையதள கட்டுரைகள் வாயிலாக வாசித்துப்பழகிய எனக்கு, அவர் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படிப்பது முற்றிலும் புதிய அனுபவம். இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுமி :) விஷ்ணுபுரம் நாவல் 1288 பக்கங்கள் கொண்ட நாவல். இதை எழுதி முடிக்க கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. தொடர்உழைப்பும் படைப்பூக்கமும் விஷ்ணுபுரம் என்னும் பிரம்மாண்டமான கற்பனை நகரத்தை பெரும்நாவலாகக் நம் கண்முன்னே கட்டெழுப்பி இருக்கிறது. ஆம்..விஷ்ணுபுரம் ஒரு புனைவு உலகம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பு! பிரம்மாண்டமான பள்ளிகொண்ட பெருமாள் கோவிலை  மையமாகக்கொண்ட இந்த நாவல், கோவில் உருவான கதைகளைச் சுற்றியும், அங்குள்ள சிலைகளைப் பற்றியும், அந்த ஊரைப் பற்றியும் அதன் மனிதர்களைப் பற்றியும் நமக்கு விவரிக்கிறது. ஸ்ரீ பாதம், கௌஸ்தூபம், மணிமுடி என்னும் 3 பகுதிகளைக்கொண்டது.  ஆன்மீக நாவல் போல ஆரம்பிக்கும் கதை மெல்ல மெல்ல உளவியல் தேடல், நடைமுறை சிக்கல்கள், தொன்மம்...

நிகழ்ந்திராத் தருணங்கள்!

படம்
நான் எப்போதுமே  இப்படித்தான்  இருந்தேன் !  ஏதேதோ  வர்ணங்கள் பூசி  என்னை மெருகேற்றி  உருவகித்திருந்தாய்  கற்பனையில் !    நான் நிறம் மங்கிவிட்டதாய்  குறை கூற ஆரம்பித்தாய்  உன் கனவில்  பெய்த மழையில்!  எதுவுமே நிகழ்ந்திராதபோது  எப்போது நிகழ்த்தியவனானேன் ?  ஒன்றுமே  புரியவில்லை எனக்கு!  நான் எப்போதுமே  இப்படித்தானே  இருந்தேன்???

இயல்பு 😊

படம்
ஈர்க்கபடக்கூடாதென  கவனமாய் தரப்பட்ட தகவல்கள்  அகங்காரத்தின்  மதில்கள் ! சாளரங்கள் வழியே  ஒளிக்கற்றை  ஊடுருவியபோதுதான்  அழுந்தத்தொடங்கியது  ஈரம் படிந்த  சிறகுகளின்  இறகுகள் ! ஒளியை நோக்கி  நகர்வது  பால்வழி அண்டத்தின்  இயல்பாய் இருக்கையில்  சுவர்களை  கடப்பது கடினமா என்ன? சிறகுலர்த்தி  உலாவிட  உண்மையில்  காரணம் ஒன்றும் வேண்டுமா? 😊

ஆச்சி!

படம்
  மைசூர் சாண்டல் சோப்பும்  ஜவ்வாது  வாசனையுமாய்  வளைய வரும்  ஆச்சியின் அருகாமை  அடிக்கடித்  தேவைப்படுகிறது ...  இப்போதெல்லாம்! நினைவுகள்  மட்டும்  வைத்துக்கொண்டு  அவளைத்தேடும்  மனதை  எப்படி  ஏமாற்றி வைப்பது ?  அவள்  மிஞ்சி நிற்கிற  நியாபக இடுக்குகளில்  ஏதோ ஒரு விதத்தில்  ஏக்கப்படுத்தும்  வெற்றிடத்தை எப்படி நிரப்புவது ? சொற்களால்  செயல்களால்  பார்வையால் சுகந்தத்தால் ஆட்கொண்டு விடுகிறார்கள்  மனிதர்கள்!  முதல் மூன்றும்   முடியாது இப்போது!   நான்காவது  தேறுவதற்கு  வாய்ப்பிருக்கிறது !  சரி !  வாசனைகளால்  கொஞ்ச நேரம்  சுவீகரித்துக் கொள்ளலாமா அவளை?  ஆன்லைன்  ஆர்டரின் வழியே  வந்து விட்டாள் என் ஆச்சி  ..  சோப்பும் ஜவ்வாதுமாய்... அவளின் வாசனையால் நிரம்பிய   என் கைகோர்த்து .. சேர்ந்தமர்ந்து  புன்னகைப்பாள்  முகம் பார்த்து .. பள்ளி முடிந்து  ஓடி வரும்   என்...

Tribute to Father "Maharaja" -16/06/2024

படம்
இந்த இரவு  நீளமானது..  வெறுமையின்  உச்சத்தில்  இருக்கிறது... கால்களை  பலமிழக்கச் செய்கிறது... எதற்கு வாழ்கிறாய்  என்று கூட கேட்கிறது ... ஆனாலும்  என் மகளின்  வலுமிக்கக் கரங்களைப்  பற்றிக்கொண்டே  மெல்லக்கடந்து விடுவேன்  நானும்!  #Maharaja

நான்!

படம்
நான் என்பது  நான் மட்டுமே அல்ல..  ஒரு  உடைந்த கண்ணாடியில் காட்டும்  பல சிதறுண்ட துண்டுகளில் , தெரியும் பிம்பங்களைப் போல , பல "நான்"களின் தொகுப்புதான் "நான்! " உங்களைக்கவர்ந்த நானும்,   விலகி நடக்க உட்படுத்திய  நானும் நானே தான்..  சிங்கம் போல் கர்ஜித்தவனும்  நான் தான்.. சிறு பூனைக்குட்டியாய், குரல் வெளியேக்கேட்காமல்  கத்தியவனும் நான் தான்.. !  சாரல் மழையில் கைப்பிடித்து, இசை ரசித்து நடந்தவனும்   நான் தான்..  யாரோவைப் போல், ஒதுங்கிச் சென்றவனும்  நான் தான் ..  முடங்கிக்கிடப்பவனும்  நான் தான்..  பம்பரமாய்ச்   சுற்றிச் சுழல்பவனும்  நான் தான்..  எல்லைகளை  வகுத்துக்கொள்வேன் ! மீறுவதற்கான  திட்டமும் தீட்டுவேன்!  நான் மட்டும் போதும் எனக்கு ! சில நேரங்களில்..  உலகமே வேண்டுமெனக்கு!  பல நேரங்களில்..  "உலகம் அழகானது"  என்று மகிழ்ந்திருந்த  அடுத்த கணத்தில்  சலிப்புற்றுக் கடுப்பாவேன்..  அதிகார ஒடுக்குமுறை பற்றி குமுறிக்கொள்வேன்.....

சுழல்!

படம்
திரும்பத்திரும்ப  நீல நிறத்தையே  தேர்வு செய்கிற  காலத்தில் இருக்கிறேன்  நான்! எவ்வளவு சொல்லியும்  ஆரஞ்சு நிறத்தை  கண்டுகொள்ளவில்லை  என்ற வருத்தத்தோடே  இருந்தாய் நீ! கைப்பை,பொட்டு, வளையல்  சேலை என ஆரஞ்சு நிறத்தில்  தகதகக்கும் உன்னை  உற்றுப்பார்த்தேன்.. ஒரே நிறத்தைத் பின்தொடர்வது  நான் மட்டும் அல்ல! சுழலில் இருந்து சீக்கிரம்  வெளிவர பிரார்த்தனைகள்  நம்மிருவருக்கும்! 💛💛💛

சாரல் !

படம்
வாடிய செடி  ஒருபோதும்  வாய்திறந்து கேட்பதில்லை!  மழைக்காக  மன்றாடுவதில்லை!  எதிர்பாரா சாரலில்  நனைந்து போகிறது  பூரிப்பில்!  மனிதர்களும்  சிலநேரங்களில்  வாடிய செடிகள் தான்! 😌😌😌
எப்போதோ  தீர்ந்து போன ஒன்றை  எப்படிப் பேசித் தீர்ப்பது ?   தீர்ந்து போவதென்பதே  கற்பனை தான்..  தீர்ந்து போவதற்கு  முன்பு கூட  அங்கே எதுவும்  வாய்த்திருக்கவில்லை..  மொழிக்குப் புலப்படா  ஒரு மௌனக்குவியல்  வெற்றிடத்தை வெறுமையாய்   நிரப்ப  மனமின்றி  "இதுவும் கடந்து போகும் "  என்று  வார்த்தைகளை அடுக்கி வைக்கிறது!  உண்மையில் எதுவும்  கடந்து செல்வதில்லை  கடக்கப்படுகிறது!