நான் என்பது
நான் மட்டுமே அல்ல..
ஒரு உடைந்த கண்ணாடியில் காட்டும்
பல சிதறுண்ட துண்டுகளில் ,
தெரியும் பிம்பங்களைப் போல ,
பல "நான்"களின் தொகுப்புதான்
"நான்! "
உங்களைக்கவர்ந்த நானும்,
விலகி நடக்க உட்படுத்திய
நானும் நானே தான்..
சிங்கம் போல் கர்ஜித்தவனும்
நான் தான்..
சிறு பூனைக்குட்டியாய்,
குரல் வெளியேக்கேட்காமல்
கத்தியவனும் நான் தான்.. !
சாரல் மழையில் கைப்பிடித்து,
இசை ரசித்து நடந்தவனும்
நான் தான்..
யாரோவைப் போல்,
ஒதுங்கிச் சென்றவனும்
நான் தான் ..
முடங்கிக்கிடப்பவனும்
நான் தான்..
பம்பரமாய்ச்
சுற்றிச் சுழல்பவனும்
நான் தான்..
எல்லைகளை
வகுத்துக்கொள்வேன் !
மீறுவதற்கான
திட்டமும் தீட்டுவேன்!
நான் மட்டும் போதும் எனக்கு !
சில நேரங்களில்..
உலகமே வேண்டுமெனக்கு!
பல நேரங்களில்..
"உலகம் அழகானது"
என்று மகிழ்ந்திருந்த
அடுத்த கணத்தில்
சலிப்புற்றுக்
கடுப்பாவேன்..
அதிகார ஒடுக்குமுறை பற்றி குமுறிக்கொள்வேன்..
ஆதிக்கம் செய்வதற்கானக்
காய்களையும் நகர்த்துவேன்!
என்னை இயக்குபவன்
அந்த "நான்" களில் ஒருவன் அல்ல !
என்னைக் கடந்து செல்கிற
நீங்களும் தான் ! 😏
கருத்துகள்
கருத்துரையிடுக