விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை சிறுகதைகள் மற்றும் அவரின் இணையதள கட்டுரைகள் வாயிலாக வாசித்துப்பழகிய எனக்கு, அவர் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படிப்பது முற்றிலும் புதிய அனுபவம். இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுமி :)
விஷ்ணுபுரம் நாவல் 1288 பக்கங்கள் கொண்ட நாவல். இதை எழுதி முடிக்க கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. தொடர்உழைப்பும் படைப்பூக்கமும் விஷ்ணுபுரம் என்னும் பிரம்மாண்டமான கற்பனை நகரத்தை பெரும்நாவலாகக் நம் கண்முன்னே கட்டெழுப்பி இருக்கிறது.
ஆம்..விஷ்ணுபுரம் ஒரு புனைவு உலகம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பு! பிரம்மாண்டமான பள்ளிகொண்ட பெருமாள் கோவிலை மையமாகக்கொண்ட இந்த நாவல், கோவில் உருவான கதைகளைச் சுற்றியும், அங்குள்ள சிலைகளைப் பற்றியும், அந்த ஊரைப் பற்றியும் அதன் மனிதர்களைப் பற்றியும் நமக்கு விவரிக்கிறது. ஸ்ரீ பாதம், கௌஸ்தூபம், மணிமுடி என்னும் 3 பகுதிகளைக்கொண்டது.
ஆன்மீக நாவல் போல ஆரம்பிக்கும் கதை மெல்ல மெல்ல உளவியல் தேடல், நடைமுறை சிக்கல்கள், தொன்மம் மற்றும் மரபுகள், மரபு குறித்தான எதிர் கேள்விகள், அதிகாரம், வர்க்க பிரிவினை, மதங்கள் சடங்குகள் மூலம் வளர்த்தெடுக்கப்படும் ஆதிக்க மனப்பான்மை, ஏன் நாத்திகம் கூட பேசுகிறது 😊
இந்த நாவல் படிக்க, வாசிப்பில், முன்னனுபவம் வேண்டுமா? ஆம் என்றே சொல்வேன். இந்த நாவல் எளிமையான கருத்துக்களை பேசவில்லை. ஜெயமோகன் அவர்களின் எழுத்துநடையை கொஞ்சமாவது உள்வாங்கி இருந்தால் மட்டுமே இந்த நாவலுக்குள் செல்லமுடியும்.
எங்கேங்கோ இழுத்துச்செல்லும் கதையோட்டத்தில், ஆசையாய் கடலில் இறங்கி பின்பு, அலையின் சுழற்சியில், திரும்பி கரைக்கே வந்துவிடும் உணர்வு வந்துவிட்டால் பின்பு படித்து முடிக்கமுடியாது 😊
இந்த நாவலின் தீவிரமும், காட்சிப்படுத்தப்படும் பிரம்மாண்டமும், பாத்திரங்களின் கனமும், அவை எழுப்பும் கேள்விகளும், உரையாடலின் ஆழமும் ஒரு எளிய வாசகனை குழப்பிவிடும்.
ஆனால் கொஞ்சம் நிதானமாகப் படித்து, சிந்தித்து சற்று தெளிவடைந்து நகரும்போது இது ஒரு அற்புத நிகழ்வாக விரிகிறது. வாசகனிடமிருந்தும் உழைப்பைக்கோரும் படைப்பு இது 😊
நடைமுறை வாழ்க்கைக்கும், விஷ்ணுபுர உலகத்திற்கும் என்னுடைய காலச்சக்கரம் சுழலும்போது, சில நேரங்களில் கால இயந்திரத்தில் பயணிப்பது போல் அயர்ச்சியை தந்தாலும், அன்றாட வாழ்க்கை எனக்கான கடமைகளை வகுத்து வைத்திருக்கும்போது, இந்த கற்பனை உலகம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. விஷ்ணுபுரத்தில் கொஞ்சநேரம் உலாவி வருவதற்கும், ஒரு வாசகியாய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து, அவர்களின் வாழ்க்கையை, உரையாடலை, தனிமையை, அகக்கொந்தளிப்பை, தேடலை, கண்டடைதலை கவனிக்கப் பிடித்திருக்கிறது.
நிறைய பகுதிகள் என்னைக் கேள்வி கேட்கிறது. பதில் தேடி இன்னும் படிக்க வைக்கிறது. நான் கதைமாந்தர்களிடம் கேட்க விழையும் கேள்விகளை அதுவே கேட்கிறது. இதுவரை நான் நாவல் குறித்து கட்டமைத்து வைத்திருந்த பிம்பத்தை அதுவே சில இடங்களில் உடைத்துப்போடுகிறது.
இந்த நாவலின் ஈர்ப்பு அம்சமாக நான் பார்ப்பதே கதையில் இதுவரை மையக்கதாபாத்திரம் என்று யாரும் இல்லை, ஒவ்வொருவரும் ஞானத்தைத் தேடி, தெளிவைத் தேடி நகரும் பாதை வெவ்வாறாக இருக்கிறது.
பிங்கலன், சோமன், திருவடி பாத்திரவார்ப்பினூடே கொஞ்சம் என்னையும் பார்க்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்களை வேறொரு கோணத்தில் பார்க்கிறேன்.
வாசிக்க ஆரம்பித்து ஒருமாதகாலம் ஆகிறது. இதுவரை 300 பக்கங்கள் தான் வாசித்திருக்கிறேன். சிலநாட்கள் வெறுமனே கதைப்போக்கை அசைபோடுகிறேன். குழப்பம் வரும்போது, மீள் வாசிப்பு செய்கிறேன். அவசரகதியில் வாசிக்க விரும்பவில்லை. ஆழ்ந்த வாசிப்பனுவமே என்னுடைய நோக்கம்.ஆகவே எனக்கே எனக்கென வாரத்திற்கு சில மணி நேரங்கள் ஒதுக்கி இருக்கிறேன்.
இன்னும் 200 பக்கங்கள் படித்துவிட்டு கதைமாந்தர்கள் பற்றி கூடுமானவரை "Spoiler" இல்லாமல் எழுதுகிறேன் 😊
விஷ்ணுபுரம் இப்போ தான் வாசிக்க ஆரம்பிச்சேன்... நீங்க எழுதி இருக்கிறதை வாசிக்கும் போது தான் தெரியுது நிச்சயம் எனக்கு மட்டும் அப்படி ஒரு அயர்வை உண்டு பண்ணலைன்னு.. வாசிக்கிறேன்... தொடர்ந்து உங்களையும்... வாசிச்சதை இத்தனை அழகா உள்வாங்கி அதைப் பகிர்கிற வாசகர்கள் குறைவு! நீங்க அழகா தொகுத்து இருக்கீங்க!
பதிலளிநீக்குKeep the good work!
ரொம்ப நன்றி @Saravana Karthika.. பரதன் இப்போ தான் உங்க number கொடுத்தான். நம்ம சீக்கிரம் பேசுவோம்.. :)
நீக்கு