ஆச்சி!
மைசூர் சாண்டல் சோப்பும்
ஜவ்வாது
வாசனையுமாய்
வளைய வரும்
ஆச்சியின்
அருகாமை
அடிக்கடித்
தேவைப்படுகிறது ...
இப்போதெல்லாம்!
நினைவுகள்
மட்டும்
வைத்துக்கொண்டு
அவளைத்தேடும்
மனதை
எப்படி
ஏமாற்றி வைப்பது ?
அவள்
மிஞ்சி நிற்கிற
நியாபக இடுக்குகளில்
ஏதோ ஒரு விதத்தில்
ஏக்கப்படுத்தும்
வெற்றிடத்தை
எப்படி நிரப்புவது ?
சொற்களால்
செயல்களால்
பார்வையால்
சுகந்தத்தால்
ஆட்கொண்டு
விடுகிறார்கள்
மனிதர்கள்!
முதல் மூன்றும்
முடியாது
இப்போது!
நான்காவது
தேறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது !
சரி !
வாசனைகளால்
கொஞ்ச நேரம்
சுவீகரித்துக் கொள்ளலாமா
அவளை?
ஆன்லைன் ஆர்டரின்
வழியே
வந்து விட்டாள் என் ஆச்சி ..
சோப்பும் ஜவ்வாதுமாய்...
அவளின் வாசனையால்
நிரம்பிய
என் கைகோர்த்து ..
சேர்ந்தமர்ந்து
புன்னகைப்பாள்
முகம் பார்த்து ..
பள்ளி முடிந்து
ஓடி வரும்
என் குழந்தையை
அவள் அம்மாவும்
அவள் ஆச்சியின் அம்மாவும்
அணைத்துக்கொள்வார்கள்
இன்று!
அழகான கவிதை . வாசனையாய் ஆச்சி வருவாள் நிச்சயம் . 🙏
பதிலளிநீக்குThank you :)
நீக்கு