சில நேரங்களில் ஒரு முயற்சியில் இறங்கும்போது, வரும் இடர்பாடுகள் நமக்கு அயர்ச்சியை உண்டாக்குகிறது . சந்தேகங்களைத் தருகிறது. ஒரு தளர்ச்சியில் சிக்க வைத்து விடுகிறது
அனுபவங்கள் என்ற "சூழல் தரும் சுழலில்" மாட்டிக்கொண்டு, பொது சமூகம் நம்முள் பதித்து வைத்திருக்கின்ற அனுமானங்களை வைத்து, நம்மை நாமே தினமும் எடை போட்டு, நமக்கு நாமே மதிப்பெண் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு சிறிய தடங்கல் கூட பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.. இது நம்மில் பலருக்கும் இயல்பான ஒன்று. சரி.. இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை . ஆனால் தடங்கல் வந்தால் என்ன செய்வது? துவண்டு விடாமல் எப்படிக் கையாள்வது?
ஆறு அறிவு இருக்கும் நமக்கு, Mr.காளை மாடு திமிலில் கைபோட்டபடி, நம் வள்ளுவர் Class எடுக்கும் தருணம் தான்
" மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து "
என்ற குறட்பா! இது இடுக்கணழியாமை அதிகாரத்தில் வருகிறது.
கல்லும் முள்ளுமாய் கடினமான வழிகளில் எல்லாம் ,வண்டியை இழுத்துச் செல்லும் ஒரு காளை மாட்டிற்கு நம்மை மாதிரியான குழப்பங்கள் எதுவும் இல்லை.. complaints இல்லை.. Consequences சிந்தித்து வாழ்வை சிக்கலாக்கிக் கொள்வதும் இல்லை.. செவ்வனே நகர்ந்து கொண்டு இருக்கிறது சுமையோடு.
இந்த அணுகுமுறை (Attitude) தான் நம்மை நம் பாதையில் தொடர்ந்து பயணிக்க வைக்கும்.
இந்தக்கருத்தை ஒட்டிய சீனக்கதை தான் " யூ காங் யீ ஷான் " (Chinese: 愚公移山; pinyin: Yúgōng Yíshān) . ஒரு தொண்ணூறு வயது நிரம்பிய ஒரு தாத்தாவின் வீடு இரண்டு பெரிய மலைகளுக்கு அருகில் இருந்ததாம். திடீரென்று ஒருநாள் அவருக்கு இந்த மலைகள் இரண்டும் இடைஞ்சலாக இருக்கிறதே என்று தோன்றியது. ஒரு வருடத்திற்குத் தேவையான கட்டுச்சோற்றைக் கட்டிக் கொண்டு மலையை சுற்றி வந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெயர்த்தெடுக்கக் கிளம்பிவிட்டார். அந்த கிராமமே அவரை "Comedy Piece" ஆகப் பார்த்தது.
"முட்டாள் கிழவன்" என்று கேலி பேசி சிரித்தது. அவரோ எதற்கும் அசரவில்லை. எனக்குப்பிறகு என் பிள்ளைகளும், என் பிள்ளைகளின் பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளும் தொடர்ந்து செதுக்கி, இந்த மலையை அப்புறப்படுத்தி விடுவோம் என்று சொல்லிவிட்டு, அவர் வேலையை செய்து கொண்டே இருந்தாராம்.. அவரின் முயற்சியைப் பார்த்து வியந்து, இந்த இயற்கையே மலைகளை நகர்த்தி வழி ஏற்படுத்தியதாக அந்தக்கதை முடிவடையும்.
" நம்பிக்கை மலைகளைக் கூட நகர்த்தும் " (Faith can move mountains) என்று சீனாவில் சிறுவர்களுக்குச் சொல்லப்படும் நீதிக்கதை இது.
தன்னுடைய நோக்கத்தை சந்தேகிக்காத இந்த சீனத் தாத்தாவை போல, சற்றும் சலித்துக்கொள்ளாமல், கரடு முரடான பாதையில் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடும் Mr.காளையைப்போல இருக்கும்போது தொடர் முயற்சி சாத்தியப்படுகிறது..
" ஒரு கல்லின் மேல் விழும் கடைசி அடியில் தான் அந்தக் கல் பிளக்கப்படுகிறது. ஆனால் அந்தக்கல்லின் மேல் விழும் எந்தவொரு அடியும் பலன் இல்லாமல் வீணாவது இல்லை. அவை ஒவ்வொன்றும் கடைசி அடிக்கு ஏற்பக் கல்லைத் தயார்படுத்துகிறது "
கருத்துகள்
கருத்துரையிடுக