முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அந்த மூன்று வார்த்தைக்காக !!!

அந்த மூன்று வார்த்தைக்காக !!! --------------------------------------------- அவளுக்கு தெரியும் ஏற்கனவே ! அரை மணி நேரமாகியும் இன்னும் அவள் சொல்லவில்லை அந்த மூன்று வார்த்தைகளை !! தொடர்ச்சியான காத்திருப்பு அல்ல இது.. தவணை முறையில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏன் எதற்கு இந்த தாமதம் ? காரணங்கள்  என்றுமே எனக்கு பிடிபடுவதில்லை !!! கடிகார முட்கள் நகர நகர காத்திருப்பின் நீளம் அதிகமாகி கொண்டே போகிறது !! ஒருவழியாய் ...... " நான் கிளம்பி விட்டேன் " என்ற தேன் வார்த்தைகளோடு தென்படுகிறாள் என் தர்ம பத்தினி !!! ஒரு இன்ச் அகல ஒப்பனைகளோடு! கல்யாணத்திற்கு அல்ல நாங்கள் தயாராவது ... காய்கறி கடைக்கு !!! ஹ்ம்ம்ம்ம் ..... அடுத்த முறை மீண்டும் சந்திக்கிறேன் காத்திருக்கும் கவலையோடும் முடிந்தால் தாமதத்தின் காரணங்களோடும் !!!!

சுயநலமாய் ஒரு சுயமழித்தல் !

கருப்பு வெள்ளை நிழல்களுக்குள்ளே உலகம் தேடும் சாமானியன் நான் ! எதிர்பாராமல் நிகழ்ந்தது வண்ணத்துப்பூச்சியின் வருகை ! நீலம் என்றது பச்சை என்றது.. வண்ணங்களை வகைப்படுத்தியது வரிசையாய்... ஒவ்வொரு நாளும் அறிமுகம் ஆயிற்று ஒவ்வொரு வண்ணம்... வான வில்லாய் மாறிற்று என்னுலகம் .... வண்ண குவியல்களுக்குள்ளே அமிழ்ந்து கிடந்தேன்.... நிறங்களுக்குள்ளே நிறைந்து கிடந்தேன்.... மறந்து போன கருப்பு வெள்ளை என் சுயமாய் தோன்றிய ஒரு நாளில் வண்ணங்கள் வேண்டாம் என்றேன் வண்ணத்துப்பூச்சியின் வருகையை வேண்டாமென்றேன்.... கனத்த மௌனத்தை  சுமந்தபடியே பறந்து  சென்றது வண்ணத்துப்பூச்சி... உணர்ச்சிகள் உறைந்த வேளையிலே கைகளில் ஏதோ பிசு பிசுப்பு... உருகி வழிந்தன நீலமும் பச்சையும் இன்னும் என்னென்னவோ நிறங்களோடு ... நிமிர்ந்து பார்த்தேன் .. நிறம் இழந்து பறந்து கொண்டிருந்தது அந்த வண்ணத்துப்பூச்சி இல்லை இல்லை இப்போது வண்ணங்கள் தொலைத்த  வெறும் பூச்சி  அது !

நீண்டு விடியும் இரவுகள்

உன்னோடு   நம்முலகம்  பேசும்  நீண்டு விடியும் இரவுகள் எல்லாம்  இன்னுமொரு ஐந்து நிமிடம் ..... இன்னுமொரு பத்து நிமிடம்..... என்று நீட்டிக்கும்  வசியச்சொல்லில்  தான்  மயங்கி உழல்கிறது .... விடியலுக்கு துணை காத்தபடியே   உற்சாகம் சற்றும் குறையாமல்  !!! :)

நிறைந்தும் நிறையாமல் !!

நிறைய பேசுகிறேன் .... நிறைவின்றி  திரும்பி நடக்கிறேன் . . . உன்னோடு பேசப் போகும்                                                                     அடுத்த நாளை   எதிர்நோக்கியபடி .. !💓

சூரியகாந்தி !!!

சுட்டெரித்தாலும் சூரியக்காதலனையே கண்கள் சந்திக்கின்றேன் ... கண நேரம் தவறாமல் பகற்பொழுதில்!! குளிர் மழை பொழிந்தாலும் நட்சத்திரப் பெண்களோடு உலா வரும் நிலாக்காதலனை நான் நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை !!!

கண்ணாமூச்சி

கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டு கண் மறையும் தூரத்தில் சட்டென திரும்பி பார்க்கும் உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒளிந்திருக்கிறது உன் காதல் !!! திரும்புவாயா ? என்ற தேடலில் தவித்து நிற்கிறது என் காதலும் !!!

மழையும் மழையானவனும் !!!

நிலா ... வானம் ... நட்சத்திரம் என்று    பேசிக்கொண்டே சென்ற   என்னை உனக்கு மழை பிடிக்குமா ? என்ற   ரீதியில் நிலம் அழைத்து வந்தாய் !! தூறல்களையும் சாரல்களையும் ரசிக்க வைத்தாய் !!! நடை   பழகும்   குழந்தையாய் மழை நடை பழகுகிறேன் .. உன் விரலோடு   விரல் கோர்த்தபடி ... என்னையும் அறியாமல் !!! மழையோடு இழைய வைத்தாய் ! உருக வைத்தாய் ! கரையவும் வைத்தாய் ! தற்செயலாய் நிலம் நோக்குகின்றேன் !!! அங்கே மழை இல்லை !   மழை நின்ற தடமும் இல்லை !   எங்கே மழை என்றேன் ..   ஆச்சரியக்குறியோடு !!!??!!!   புன்னகை மட்டும் பூத்தாய்   மர்மமாய் !!!   இழைதல் , கரைதல்   எல்லாம் இப்போதும்   நிகழ்கிறதே என்றேன் விடாமல் !!!   " நீ நனைந்தது மற்றும் நனைவது மழையில் இல்லை !! என்னில் !! "   என்றபடி அதே புன்னகையாய்   மீண்டும்   பரிசளித்தாய்   கொஞ்சம் குறும்போடு !!

நீயும் உனது தோன்றல்களும் !!!

எ னக்கு ஒன்று தோன்றுகிறது !!! அல்லது தோன்றியது !!! என்று நீ தொடங்கும் போதெல்லாம் என்ன தோன்றியிருக்கும் என்று எனக்குள் எண்ணற்ற தேடல்கள் ... தோன்றல்கள்.. கற்பனைக்கு சிறிதும் எட்டாத உன்  தோன்றல்களை நீ விவரிக்கும் போதெல்லாம் உன்  தோன்றல்களுக்குள்ளே நானும் பயணிக்கிறேன் !!! இப்போது எனக்கும் தோன்றுகிறது... அல்லது ஏற்கனவே தோன்றியிருக்கலாம்  எனக்கும் கூட !!!  :) 

விழித்திடு நண்பா !

விடியட்டும் பார்க்கலாம் என்று முடங்கி கிடந்தால் வெளிச்சம்  வெளியே மட்டுமே இருக்கும் உனக்குள் அல்ல ! ! !

புன்னகை ! :)

மனிதர்களே  ...! வார்த்தைகளால் பேச வேண்டாம் ! புன்னகையால் பேசுங்கள் ! ஒற்றைப்புன்னகை ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது  ! சினேகத்தின் முதல் படி புன்னகை! உலகம் முழுவதும் அறிந்த மொழி புன்னகை ! உங்கள் முகத்தை மட்டுமல்ல .... வாழ்க்கையையும் அழகாக்குவது புன்னகை தான் ! போராட்டத்தில் சாதிக்க முடியாததை புன்னகையால்  சாதிககலாம் ! புன்னகைக்க தெரிந்த  மனிதன் புயலையும் கூட பூப்போல கையாளுவான் ! உங்கள் பாதையில் சிதறி கிடப்பவை நீங்கள் தவற விட்ட வாய்ப்புகள் மட்டுமல்ல ! நீங்கள் தவற விட்ட புன்னகைகளும் தான் ... ஆகையால் மனிதர்களே ...! புன்னகைக்க கற்றுக்கொள்வீர் !!!  

பொறியியல் வாழ்க்கை !

அவசரமாய் எழுந்து , அரைகுறையாய் கொறித்து, வகுப்பறையில் கனவு கண்டு, எதற்காகவோ ஏனோ காரணமின்றி சிரித்து, புத்தகங்களோடு  மல்லுக்கு நின்று , இயந்திரங்களோடு போராடி , Circuits - உடன் திண்டாடி, Computer   முன்பு மனனம் செய்த Program -களை ஒப்பித்து , புரிந்து கொள்ளாமலே பல விஷயங்களை உள்வாங்கி , தேர்வு தாளில் அதை கடினப்பட்டு எழுதி முடித்து ,  Semester என்னும்   கிணறு தாண்டும் வைபவத்தை வருடத்திற்கு  இருமுறை கொண்டாடி , சின்ன சின்ன ஆசைகளை கூட துறந்து , Calculator  களுடன் குட்டிக்கரணம்  அடித்து , Placement  கனவு ஒரு பக்கம் ... Higher Studies கனவு ஒரு பக்கம்  ... என்று இரண்டிற்கும் இடையில் குழம்பி ... குழம்பி ... குழம்பி ... அய்யோடா !  பொறியியல் வாழ்க்கை ஏன் பொறுமலாகவே கழிகிறது ?

Ego

  நான்  முதலில் பேசுவேன் என்று  நீயும் ....  நீ முதலில் பேசுவாய்  என்று நானும் ...  யோசித்து  நிற்கையில்  நம்மிருவருக்கும் இடையே  Ego  மட்டும்  புன்னகையோடு!!!

உனக்கும் எனக்குமான எல்லை !!!

உனக்கும் எனக்குமான எல்லை எங்கே முடிகிறது என்று தெரிய வில்லை! எப்போது இணையும் என்பதில் தரிசனமும் இல்லை உருவமும் உச்சரிப்பும் பரிச்சயமானவை இல்லை ஆனால் கண்ணுக்கு  தெரியாத இழையில் இணைக்க பட்டிருக்கிறது உனக்கும் எனக்குமான உறவு! நீயும் நானும் ஓரிசையாய் இயங்குகின்றோம் நமக்கான  தேடலில் ! நாட்கள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்புகள் ஏறி கொண்டே போகிறது ! எதையும் எதிர்பார்க்காதே என்ற உள்மன அச்சுறுத்தலோடு !!!

கண்ணகியாக இருக்க விரும்பவில்லை !

நீ மாதவியோடு குலவி விட்டு வந்த பின்னரும் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மட்டும் !!!

வெற்றுத்தாள் !

வெற்றுத்தாளை வெறும் பக்கங்களாய் விட்டு வைக்கிறேன் !!! தோன்றியதை எழுதி தோற்றுப்போக மனமில்லை  மறுபடியும்! எதிர்கால எதிர்பார்ப்புகளும் இல்லை கடந்தகால கசப்புகளும் இல்லை இந்தக் கணத்தில் எழுதி தீர்ப்பதற்கு ! நிகழ்கால நிஜங்களோடு நிலை மாறிய நொடிப்பொழுதில்! உறைந்த இடத்தில் உறைந்தபடி இருக்கிறேன்.. வெற்றுத்தாளை வெறுமையாய் பார்த்தபடி!!