உனக்கு பிடித்தமான ரோஜா மலர்களோடு ! பிரியமானவளே.. பிரிவின் வலியில் என்னைப் பின்னியவளே ... நலம் கேட்க வரவில்லை ! சொல்லிவிட்டு போக வந்தேன் நலமில்லை நான் என்றும் தொலைக்க முடியா உன் நினைவுகளால் தான் என்றும்... வார்த்தை தவறிவிட்டாய் ! வாழ்க்கை முழுவதும் கரம் கோர்த்து வருவதாய் சொல்லிவிட்டு ! பாதை மாற்றிக்கொண்டாய் பாதியிலேயே.. அன்றொரு நாள் நிலவும் நடையும் பிடித்திருந்தது.. நீ உடன் வந்த பொழுதுகளில் இனித்திருந்தது. இன்றோ இருள் கவிழ்ந்த இரவு தனித்துக் கிடக்கிறது கோபங்கள் வருவதில்லை முன் போல் எனக்கு.. கோபிக்கவும் யாருமில்லை ... உண்மையில் கோபித்துச் சென்றவள் நீதான் .. என்னிடமிருந்து பறித்த சிறகுகளோடு .... யாதுமாகி நின்றவள் நீ! யாரோவாகிப் போனாய் இன்று... சுயநலக்காரியடி நீ ... சுயமழித்துச் சென்று விட்டாய் ... மீதமுள்ள நாட்களை மிகக்கொடிதாய் நகர்த்த வைத்திருக்கிறாய் ... உன் மீதான நினைவுகளை அசை போட்டபடியே.. உன் கல்லறைக்கு அருகில் அமர்ந்தவாறும் .... உனக்குப் பிடித்தமான ரோஜா மலர்களோடும் !!!
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !