ஏதேதோ வரைந்து காட்டுகிறேன்... வண்ணங்கள் தீட்டுகிறேன்... உன்னிடம் பெருமை பேசும் ஆர்வத்தோடு... கோடுகளாலும் கோளங்களாலும் காகிதம் நிறைக்கிறாய் நீ... ரவிவர்மாவின் மும்முரத்தோடு ... சரியான போட்டி தான்... உன் முயற்சிக்கும் என் வளர்ச்சிக்கும்.. நீ வரைந்த ஓவியங்களை கோப்புகளிலும் நான் வரைந்த"ஏதோ"க்களை குப்பைத் தொட்டியிலும் எப்போதோ சேர்த்து விட்டேன்... உன் மழலைக் கோப்புகளின் சில பக்கங்கள் என் கர்வம் அசைத்துப் போனதாக இருக்கட்டும் !!! பின்னாளில் சிரித்துக் கொள்வேன் !!!
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !